திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.63 திருவண்ணாமலை - திருநேரிசை
ஓதிமா மலர்கள் தூவி
    உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோள்
    சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
    நினையுமா நினைவி லேனே.
1
பண்டனை வென்ற இன்சொற்
    பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
    கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
    சொல்லுமா சொல்லி லேனே.
2
உருவமும் உயிரு மாகி
    ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
    நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
    மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
    மற்றொரு மாடி லேனே.
3
பைம்பொனே பவளக் குன்றே
    பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
    சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
    அணியணா மலையு ளானே
எம்பொனே உன்னை யல்லால்
    யாதும்நான் நினைவி லேனே.
4
பிறையணி முடியி னானே
    பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறiவா வண்டார்
    கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
    அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
    லியாதுநான் நினைவி லேனே.
5
புரிசடை முடியின் மேலோர்
    பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
    கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
    மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
    பாதநான் மறப்பி லேனே.
6
இரவியும் மதியும் விண்ணும்
    இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்
    திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
    அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
    பரமநான் பற்றி லேனே.
7
பார்த்தனுக் கன்று நல்கிப்
    பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
    நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
    அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
    திறமலாற் றிறமிடி லேனே.
8
பாலுநெய் முதலா மிக்க
    பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்
    காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலநீர் கொண்டல் பூகம்
    அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
    மலரடி மறப்பி லேனே.
9
இரக்கமொன் றியாது மில்லாக்
    காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
    ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
    மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
    திருவடி மறப்பி லேனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com